Site icon Thanjavur News

After 17 years, Kudamuzku work has started at Punnainallur Mariamman temple in Thanjavur.

புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தஞ்சையை ஆண்ட சோழபேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டு திசைகளிலும் அஷ்டசக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாகும்.

இந்த கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது.இந்த சிலையில் கோடை காலங்களில் முத்து, முத்தாக வியர்வை துளிகள் வெளியாகும் என்பது ஐதீகம். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்மனுக்கு பூக்களை தவிர வேறு எந்தவித அபிஷேகமும் செய்வதில்லை.

பிற அபிஷேகத்துக்கான அம்பாளின் வலதுபுறத்தில் வடக்கு நோக்கிய நிலையில் விஷ்ணு துர்க்கை உள்ளது. இந்த விஷ்ணு துர்க்கைக்கும், அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

குடமுழுக்கு மேலும் ஆகம விதிப்படி இந்த கோவிலில் நாள்தோறும் 4 கால பூஜைகள் நடந்து வருகின்றன. மூலவராக விளங்கும் புற்று வடிவில் உள்ள அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்டல தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். அம்பாளுக்கு ஆண்டுதோறும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறும்.

இந்த கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்இந்த கோவிலில் பல்வேறு திருப்பணிகளுடன் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. பொதுவாக கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். ஆனால் 17 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படாமல் இருந்தது.

தமிழகஅரசு பல கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலிலும் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

திருப்பணிகள் தொடங்கியது அவர்களின் எதிர்பார்ப்புபடி குடமுழுக்கு நடத்துவதற்கான திருப்பணிகள் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் தொடங்கப்பட்டுள்ளன. கோவிலில் கொடிமரத்தின் இருபுறமும் உள்ள மண்டபங்களின் தூண்கள் விரிசல் விழுந்து இருந்ததால் அந்த மண்டபங்களை இடித்துவிட்டு புதிய மண்டபங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டன.

அதன்படி 2 புறமும் உள்ள மண்டபங்கள் இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி கோவிலுக்கு வெளியே புதிய தரைத்தளம் அமைப்பதற்கான பணியும் தொடங்கப்பட்டுள்ளது.வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பாலாலயம் நடைபெறுகிறது. அதன்பிறகு ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள் புனரமைக்கும் பணி தொடங்கப்படும்.

இந்த பணிகள் எவ்வளவு விரைவில் முடிக்கப்படுமோ அதன்பிறகு குடமுழுக்கு நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்துவதற்கான திருப்பணிகள் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version