Site icon Thanjavur News

A procession of 52 Ganesha idols in Thanjavur News

தஞ்சை மாநகரில் சதுர்த்தியையொட்டி 52 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கரந்தை வடவாற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை விநாயகர் சதுர்த்தியையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையம், வாடிவாசல் கடைத்தெரு, பில்லுக்காரத்தெரு, செக்கடித்தெரு, பூக்காரத்தெரு, கரந்தை மார்க்கெட், அண்ணாநகர், பர்மாகாலனி, மானம்புச்சாவடி, கீழவாசல், மேலவீதி, வடக்குவீதி, சீனிவாசபுரம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜ.க., இந்து முன்னணி, விஸ்வரூப விநாயகர் விழாக்குழு, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 74 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கடந்த 2 நாட்களில் 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. 3-ம் நாளான நேற்றுமாலை தஞ்சை மாநகரில் ஆங்காங்கே வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு லோடு ஆட்டோக்கள், ஆட்டோக்கள், வேன் ஆகியவற்றின் மூலம் தஞ்சை ரெயிலடிக்கு கொண்டு வரப்பட்டன.

ஊர்வலம் பின்னர் பா.ஜ.க. பொருளாளர் விநாயகம் தலைமையில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து பேண்டு வாத்தியம் முழங்க விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் காந்திஜிசாலை, பழைய பஸ் நிலையம், தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கொடிமரத்துமூலை வழியாக கரந்தை வடவாறு பாலத்தை சென்றடைந்தது.

பின்னர் ஒவ்வொரு விநாயகர் சிலையாக வடவாற்றில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்திற்கு முன்பு சிறுவர்கள் சிலம்பாட்டம் ஆடியபடியும், சூருள்வாள் சுற்றியபடியும் சென்றனர். இதைத்தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் தஞ்சை ரெயிலடியில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமை தாங்கினார்.

பாம்பு நடனம் மேளதாளத்துடன் புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வடவாறு பாலத்தை சென்றடைந்தது. பின்னர் வடவாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

ஊர்வலத்திற்கு முன்பு சிறுவர்கள் தீச்சட்டி ஏந்தியும், பெண்கள் பாம்பு நடனம் ஆடியும் சென்றனர்.விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ஊர்வலத்தையொட்டி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தஞ்சை மாநகரில் நேற்று மட்டும் கரந்தை வடவாற்றில் 52 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

Exit mobile version