தஞ்சை பெரிய கோவிலின் தென்புற கோஷ்டத்தில் ஆடவல்லானின் அழகிய சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி ஆனந்த நடனமாடுவதை தத்ரூபமாகக் காட்டும் அழகிய சிற்பம் இது. ஆடவல்லானின் இருபுறமும் மேலே யாழை மீட்டும் தேவர்களும், கீழே ஒருபுறம் ஒருவர் குடமுழா இசைக்க மறுபுறம் காரைக்காலம்மையார் கைத்தாளமிசைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதி இது.
ஆடவல்லானின் தூக்கிய இடக்காலுக்கும் இடது கரத்துக்கும் இடையில் உடலை முறுக்கிய நிலையில் பாம்பொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. விரிசடையும், இடை ஆடையும் காற்றில் விரிந்து பறப்பது போன்று அமைத்திருப்பது காண்கையில் சோழச் சிற்பிகளின் தனித்துவமான சிற்பத்திறன் விளங்கும்.
மற்றொரு சிறப்பாக கோவிலுக்கு நிவந்தமாக வழங்கப்பட்ட பொன்னாலான பொருட்கள், வெள்ளி பொருட்கள், செப்புக்குடங்கள் என அனைத்து அளவைகளுமே ஆடவல்லான் பெயரில் தான் அழைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.