தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் மது குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் மதுவில் சயனைடு கலந்தது எப்படி? – தனிப்படை விசாரணை
தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் நேற்று முன்தினம் காலை மது குடித்த மீன் வியாபாரி குப்புசாமி(68), கார் டிரைவர் விவேக்(36) ஆகியோர் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்து இறந்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் கிழக்கு போலீஸார் பார் உரிமையாளரும், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவருமான பழனிவேல், பார் ஊழியர் காமராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாருக்கு சீல் வைக்கப்பட்டது.இதனிடையே, நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் ஆகியோர் கூறும்போது, 2 பேரும் சயனைடு கலந்த மதுவை அருந்தியதால் உயிரிழந்தது தடய அறிவியல் ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், மதுவில் சயனைடு கலக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.மேலும், கூடுதல் எஸ்.பி.க்கள் ஜெயச்சந்திரன், முத்தமிழ்ச்செல்வன் ஆகியோரது மேற்பார்வையில், டிஎஸ்பிக்கள் பட்டுக்கோட்டை பிரித்விராஜ் சவுகான், திருவிடைமருதூர் ஜாபர் சித்திக், திருவாரூர் பிரபு, தஞ்சாவூர் ராஜா, பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
மதுவில் சயனைடு கலந்தது எப்படி? எங்கிருந்து வாங்கி வரப்பட்டது? என விசாரணை நடக்கிறது.இதனிடையே பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபாட்டில்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து சப்ளை செய்யப்பட்டது தெரியவந்ததால், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் முருகானந்தம், விற்பனையாளர்கள் சத்தியசீலன், திருநாவுக்கரசு, பாலு ஆகியோரை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
திசை திருப்புவதாக புகார்: உயிரிழந்த 2 பேரின் உறவினர்கள் கூறும்போது, ‘‘மதுவில் சயனைடு கலந்திருப்பதாக கூறி அதிகாரிகள் திசை திருப்புகின்றனர். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சயனைடு எங்கிருந்து வந்தது என விசாரிக்க வேண்டும்’’ என்றனர்.