தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, புத்தாடை, பலகாரம் தான் நினைவுக்கு வரும். இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது. ஜவுளி எடுக்க, மளிகை பொருட்கள் வாங்குவதற்கு, பட்டாசு வாங்குவதற்கு என்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
தஞ்சை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது. தஞ்சை இர்வீன்பாலத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலை, தெற்கு அலங்கம், கீழராஜவீதி, அண்ணா சிலையில் இருந்து கீழவாசல் செல்லும் சாலையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
அலைமோதும் மக்கள் கூட்டம் சாலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாலையோரத்தில் தரைக்கடைகளும் ஆங்காங்கே போடப்பட்டுள்ளன. இதனால் காந்திஜி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் இந்த சாலை வழியாகத்தான் சென்றன.
இது தவிர இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வந்தன. தரைக்கடைகள் மற்றும் மக்கள் கூட்டம் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டன. இதனால் காந்திஜி சாலையை கடக்க அரைமணி நேரத்திற்கும் மேல் ஆகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். போக்குவரத்து மாற்றம் இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருநாளே இருப்பதால் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் காந்திஜி சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நேற்று காலை முதல் மாற்றம் செய்யப்பட்டது.
தஞ்சை இர்வீன்பாலத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை காந்திஜி சாலையில் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் பஸ் போன்ற வாகனங்கள்செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
பஸ்கள் திருப்பி விடப்பட்டன இதே போல பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்கள் தெற்கு அலங்கம், காவேரி சிறப்பங்காடி, சோழன்சிலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதே போல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் பெரியகோவில், சோழன் சிலை வழியாக திருப்பி விடப்பட்டன.
போக்குவரத்து திருப்பி விடப்பட்டாலும் கோர்ட்டு சாலை, ரெயில் நிலையத்தில் இருந்து ஆற்றுப்பாலம் வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.