தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி, 2-வது தவணை தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசி என மொத்தம் 39 லட்சத்து 56 ஆயிரத்து 577 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அரசு தடுப்பூசி மையங்களில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 1,700 முகாம்கள் இதுவரை 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் உரிய கட்டணத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம் மேற்பார்வையில் தஞ்சை மாவட்டத்தில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. மொத்தம் 1700 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது.
51,437 பேருக்கு தடுப்பூசி இதில் முதல் தவணை தடுப்பூசியாக நேற்று 10 ஆயிரத்து 585 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 12 ஆயிரத்து 927 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 27 ஆயிரத்து 925 பேருக்கும் என மொத்தம் 51 ஆயிரத்து 437 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்மூலம் தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 40 லட்சத்து 8 ஆயிரத்து 14 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை பூஸ்டர் தடுப்பூசியானது 18 வயது முதல் 59 வயதுடைய அனைவருக்கும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் இலவமசாக செலுத்தப்பட உள்ளது. தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா நோயில் இருந்து தங்களையும், தங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளுமாறு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.